search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூபேஷ் பாகல்"

    இந்த ‘சாட்டையடி சடங்கை’ செய்வதால், ஒருவரின் வாழ்வில் பிரச்சினைகள் விலகி, மகிழ்ச்சி மலரும் என்பது சத்தீஷ்கார் பக்தர்களின் நம்பிக்கை.
    ராய்ப்பூர் :

    தீபாவளி தினத்துக்கு அடுத்த நாளன்று நாடு முழுவதும் கோவர்த்தன பூஜை கொண்டாடப்படுகிறது. இந்திரனிடம் இருந்து மக்களை காக்க கிருஷ்ணர் கோவர்த்தன மலையைத் தூக்கியதைக் குறிக்கும் விதமாக இப்பூஜையை மக்கள் கொண்டாடுகின்றனர். சத்தீஷ்கார் மாநிலத்திலும் கோவர்த்தன பூஜை வழிபாடுகள் நேற்று நடைபெற்றன.

    இந்நிலையில் துர்க் நகரில் உள்ள கோவிலில் நடைபெற்ற பூஜையில் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் பங்கேற்று வழிபட்டார். அங்கு கோவர்த்தன பூஜை வழிபாட்டு வழக்கப்படி அவர் ‘சாட்டை’ அடியும் பெற்றார்.

    பாரம்பரிய உடையும், தலைப்பாகையும் அணிந்திருந்த பூபேஷ் பாகல், தனது வலது கையை விறைப்பாக நீட்டியபடி நின்றார். அவர் கையை தடவிப்பார்த்த ஒருவர், சாட்டையால் 8 முறை ஓங்கி ஓங்கி அடித்தார்.

    அப்போது சிறிதும் முகம் சுழிக்காமல், கையை மடக்காமல் அசையாது முதல்-மந்திரி நின்றார். சுற்றிலும் பக்தர்கள் சூழ்ந்து நின்றிருந்த அவ்வேளையில், மேளதாளங்கள் ஓங்கி ஒலித்தன. சுற்றி நின்ற பலர், அக்காட்சிகளை தங்கள் செல்போன்களில் படம் எடுத்தனர்.

    8 முறை அவரது கையில் சாட்டையால் அடித்தபின், சாட்டைக்காரர் முதல்-மந்திரியை கட்டித்தழுவிக்கொண்டார்.

    இதுதொடர்பான 23 வினாடி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பாக பரவியுள்ளது.

    இந்த ‘சாட்டையடி சடங்கை’ செய்வதால், ஒருவரின் வாழ்வில் பிரச்சினைகள் விலகி, மகிழ்ச்சி மலரும் என்பது சத்தீஷ்கார் பக்தர்களின் நம்பிக்கை.
    ×